இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களுக்கு தக்காளிகளை வீசிய தொழிலாளி
இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களுக்கு தக்காளிகளை தொழிலாளி வீசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
தங்கத்தின் விலை உயர்வது போன்று தக்காளி விலையும் சில நாட்களாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.100 வரை விற்பனையானது. இந்தநிலையில் தக்காளியை ஏற்றிக்கொண்டு சென்ற மினிலாரியில் இருந்து ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு தக்காளியை தூக்கி எறியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை ஏற்றிக் கொண்டு ஒரு மினிலாரி சென்றது. அப்போது அதன் பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்கள், மினிலாரியில் தக்காளி கூடைகளுடன் அமர்ந்திருந்த தொழிலாளியிடம் தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி வேண்டும் கொஞ்சம் கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். அப்போது லாரியில் இருந்து தக்காளிகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் தூக்கி வீசினார். அதை வாலிபர்கள் பிடித்து சேகரித்தனர். இதை அவர்களே வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை வேலூர் வாசிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.