தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் தொழிலாளிக்கு கை, கால் செயலிழப்பா?; கலெக்டரிடம் மனைவி மனு
தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் தொழிலாளிக்கு கை, கால் செயலிழந்ததாக தேனி கலெக்டரிடம் மனைவி புகார் மனு கொடுத்தார்.
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஆதிபராசக்தி. இவர் தனது கணவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் ஆதிபராசக்தி ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், "எனது கணவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்பிறகு நரம்பு சிகிச்சை மருந்துகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புற்றுநோய்க்கான மருந்துகளை மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் பெற்றுக்கொள்ளுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு திடீரென்று அவருக்கு கை, கால்கள் செயல்படவில்லை. எனவே, எனது கணவரின் உடல்நிலையை சரிசெய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
மேலும் அவர், தனது கணவருக்கு தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் கை, கால் செயல் இழந்ததாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் பரபரப்பான தகவலை குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரப் பணிகள் துணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.