1,000 மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி
1,000 மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்.
ராணிப்பேட்டை இ.ஐ.டி. பாரி விளையாட்டு மைதானத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, சைல்டு லைன் 1098, மற்றும் தனியார் பள்ளி, ஆகியவை இணைந்து குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 1,000 மாணவிகள் கலந்துகொண்டு ஸ்டாப் மேரேஜ் என்ற ஆங்கில எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி யுனிவர்சல் புக் ஆப் ரெகார்டு் மற்றும் கலாம் புக் ஆப் ரெகார்டு ஆகிய சாதனைகளை நிகழ்த்தினர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பின்னர் கலெக்டர் தலைமையில் குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழியை அனைத்து மாணவிகளும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தேசபக்தர் காந்தி காமராஜ், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா துணைத்தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, குழந்தைகள் நல குழுமத் தலைவர் வேதநாயகம், யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் பாபு பாலகிருஷ்ணன், தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் மதிவாணன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மேரி குயின் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.