உதடு ஒட்டாமல் திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை


உதடு ஒட்டாமல் திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை
x

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 500 பேர் உதடு ஒட்டாமல் திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளனர். அவர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டினார்.

ராணிப்பேட்டை

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 500 பேர் உதடு ஒட்டாமல் திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளனர். அவர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாராட்டினார்.

உலக சாதனை

வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 500 மாணவிகள் உதடுகள் ஒட்டாமல் திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மனப்பாடம் செய்யாதீர்கள்

திருக்குறளை படித்து அதன்படி நாம் வாழ்க்கையில் பின்பற்றி நடக்கும்போது ஒவ்வொரு அடியும் நமக்கு வெற்றியாக மட்டுமே அமையும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் திருக்குறள் நமக்கு உறுதுணையாக அமைந்திருக்கும். பல நபர்கள் ஆங்கில புத்தகங்களை மேலாண்மைக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும் வழங்குவார்கள். ஆனால் திருக்குறளில் சொல்லாத கருத்துக்களே இல்லை. அனைத்து புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் திருக்குறள் ஒரே நூலில் மட்டுமே அடங்கிவிடும்.

மாணவ-மாணவிகளாகிய நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்களோ அதற்காக தினமும் முயற்சி செய்தால் நிச்சயம் அதுவாகவே மாறுவீர்கள். படிக்கும் பொழுது எதனையும் மனப்பாடம் செய்யாதீர்கள். கருத்துக்களை மனதளவில் உள்வாங்கி, அர்த்தம் புரிந்து படித்தால் அது நிச்சயம் வாழ்நாள் முழுவதும் மறக்காது. இப் பிறவியில் நாம் பயிலும் கல்வி நமக்கு ஏழு பிறவிகளுக்கும் காவலாகவும், உறுதுணையாகவும் அமையும் என்கிறார் வள்ளுவர்.

ஆதலால் படிக்கின்ற வயதில் மாணவ- மாணவிகள் படிப்பில் நன்றாக கவனம் செலுத்தி படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க தலைவர் லட்சுமணன், பன்னாட்டு தமிழ்ச் சங்க தலைவர் பாலாஜி லோகநாதன், திமிரி தமிழ் கவிஞர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மணிகண்டீஸ்வரர், பரமேஸ்வரன், புலவர் தமிழ்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story