காயம் அடைந்து சுற்றித்திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்


காயம் அடைந்து சுற்றித்திரியும்  யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்
x

ஜவ்வாது மலைப்பகுதியில் காயம் அடைந்து சுற்றித்திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அடுத்த பீமகுளம், நாயக்கனூர், அருணாச்சலம் கொட்டாய், மலைரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றைத்தந்த யானை ஒன்று சுற்றித் திரிகிறது. கடந்த 10 நாட்களாக காட்டுப்பகுதியில் போதிய அளவு உணவும், தண்ணீரும் கிடைக்காததால் ஊருக்குள் வந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி, தண்ணீரையும் அருந்துகிறது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதனை மீண்டும் காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் யானையின் இடது காலில் பலத்த காயம் அடைந்துள்ளதால், அது காட்டிற்குள் செல்ல மறுத்து கிராமத்தையே சுற்றி, சுற்றி வருகிறது. இதுகுறித்து கடந்த 17-ந் தேதி தினத்தந்தியில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார் சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசியதாவது:-

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள காவலூர், நாயக்கனூர், அருணாச்சலம் கொட்டாய் பகுதியில் ஒற்றைத்தந்த யானை காலில் பலத்த காயங்களுடன் கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் வனத்துறை அமைச்சர் துறை அதிகாரிகளிடம் கூறி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story