ஓராண்டுக்கு பிறகு 14 வயது சிறுவன் கைது
பூதப்பாண்டி அருகே மாணவர் மர்ம சாவு விவகாரத்தில் ஓராண்டுக்கு பிறகு 14 வயது சிறுவனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே மாணவர் மர்ம சாவு விவகாரத்தில் ஓராண்டுக்கு பிறகு 14 வயது சிறுவனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
குளத்தில் சிறுவன் பிணம்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நஜீப். இவருடைய மகன் ஆதில் முகமது (வயது 12). 7-ம் வகுப்பு படித்து வந்த இவன் கடந்த ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது 6-ந் தேதி அன்று திடீரென காணாமல் போனான். பல இடங்களில் தேடியும் மாணவனை பற்றி தகவல் இல்லை. 2 நாட்கள் கழித்து அதாவது 8-ந் தேதி திட்டுவிளையை அடுத்த மணத்திட்டை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஆதில் முகமதுவை அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவன் ஒருவன் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் அந்த மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் எந்த தகவலையும் பெறமுடியவில்லை. இதனால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
சிறப்பு விசாரணைக்குழு
இந்த மர்ம சாவு தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்-மந்திரியிடம் ஆதில் முகமதுவின் தந்தை முகமது நஜீப் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி, ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. எனினும் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.
14 வயது சிறுவன் கைது
அதன்படி சி.பி.சி.ஐ.டி.யில் உள்ள ஓ.சி.யு. (ஆர்கனைஸ்டு கிரைம் விசாரணைப் பிரிவு) பிரிவு துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை தொடங்கினர்.
இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக ஆதில் முகமதுவை அழைத்துச் சென்ற 14 வயது சிறுவனை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பிறகு இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பிறகு சிறுவன் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
3 பிரிவுகளின் கீழ் அந்த சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.