பண்ருட்டி வாலிபரை 9-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்
முகநூல் மூலம் பழகி காதல் வலை விரித்து பண்ருட்டி வாலிபரை 9-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், வீட்டில் இருந்த நகை-பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் மகன் அருள்ராஜ் (வயது 24). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி.
இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செல்போனில் முகநூல் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் எனது முகநூல் கணக்கில் இணைந்தார். அப்போது அவர், வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ஒட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்று அறிமுகம் செய்தார். மேலும் அவர், தான் ஒரு அனாதை என்றும், உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் கூறினார்.
திருமணம்
அதன்பிறகு ஒரு நாள் திடீரென அவர், என்னை பிடித்துள்ளதாகவும், நண்பராக பேச வேண்டும் என்றார். பின்னர் இருவரும் முகநூலில் நண்பர்களாக பேசி வந்தோம். இதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசினாம். அப்போது அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
உடனே நானும், எனது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்ய சம்மதம் வாங்கினேன். அதன்படி எனக்கும், மகாலட்சுமிக்கும் கடந்த 23.1.2022 அன்று திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. அதன்பிறகு 4 மாதம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.
நகை-பணத்துடன் மாயம்
இந்த நிலையில் திடீரென ஒரு நாள், மகாலட்சுமி தனது பள்ளி தோழிக்கு உடல் நிலை சரியில்லை எனவும், சென்னைக்கு சென்று பார்த்து வருவதாகவும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.
உடனே அவர், எனது வீட்டில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர், மீண்டும் வரவில்லை. உடனே நான், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியாக பதில் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டார்.
ஏமாற்றினார்
இதையடுத்து அவர் கொடுத்த முகவரியில் விசாரித்தபோது, அது தவறான முகவரி என்பதும், அவர் என்னை போன்று பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதும் தெரியவந்தது. அந்த வகையில் என்னை அவர், 9-வதாக திருமணம் செய்துவிட்டு நகை, பணத்துடன் ஓடிவிட்டார். என்னை ஏமாற்றிய மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தி வருவதோடு, மகாலட்சுமியை தேடி வருகிறார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.