அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீர் சாவு எடப்பாடியில் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த பெண்ணின் உறவினர்கள் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி,
பெண் சாவு
எடப்பாடியை அடுத்த சின்னமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகள் கோமதி (வயது 24). திருமணமாகாத இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை கோமதியின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோமதி, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உறவினர்கள் முற்றுகை
இதனால் கோமதியின் உறவினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, டாக்டர்களின் தவறான சிகிச்சையினால் கோமதி இறந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் எடப்பாடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்த பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எடப்பாடி அரசு ஆஸ்பத்திரி முற்றுகையிடப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.