தாறுமாறாக ஓடிய பஸ் மோதி பட்டதாரி இளம்பெண் பலி


தாறுமாறாக ஓடிய பஸ் மோதி பட்டதாரி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி பட்டதாரி இளம்பெண் பலியானார். தந்தை கண்முன்னே இந்த சோக சம்பவம் நடந்தது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி பட்டதாரி இளம்பெண் பலியானார். தந்தை கண்முன்னே இந்த சோக சம்பவம் நடந்தது.

தாறுமாறாக ஓடிய பஸ் மோதல்

நாகர்கோவிலில் இருந்து நேற்று மதியம் ஒரு அரசு பஸ் நெல்லைக்கு புறப்பட்டது. பஸ்சை இறச்சகுளம் சாஸ்தா நகரை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 53) என்பவர் ஓட்டினார். பெருவிளையை சேர்ந்த பத்மகுமார் (55) கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் மதியம் 1.15 மணிக்கு ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே வந்த ேபாது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்குமாக தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் பஸ் சாலையோர கடைகளின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிள்கள், கார், ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி நின்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பகுதியில் நின்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பஸ்சுக்குள் இருந்த பயணிகளும் அபய குரல் எழுப்பினர்.

இளம்பெண் பலி

பஸ் மோதியதில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளம்பெண்ணும், ஆணும் சிக்கி படுகாயமடைந்தனர். உடனே பொதுமக்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் இளம்பெண் துடிதுடித்த நிலையில் அதே இடத்திலேயே பலியானார்.

இதனை பார்த்த படுகாயமடைந்த நபர், அய்யோ என் மகள் இறந்து விட்டாளே என கதறி அழுதார். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே விபத்து பற்றி கேள்விபட்டதும் ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்து இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், பலியான பெண் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைபட்டி எடுப்பால் கக்கன் தெருவை சேர்ந்த மகராசி (23) என்பது தெரியவந்தது. உடன் வந்து படுகாயமடைந்தவர் அவருடைய தந்தை ஜெயபால் (46) ஆவார்.

தந்தை கண்முன்னே பரிதாபம்

மகராசியின் தங்கை செல்வி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படிக்கிறார். மேலும் மகராசி ஏற்கனவே அதே கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தங்கையை பார்த்து விட்டு தனது சான்றிதழ்களையும் வாங்குவதற்காக தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.

ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அரசு பஸ் தாறுமாறாக வருவதை கண்டு கடையின் முன்பு ஒதுங்கியுள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மோதியதில் இளம்பெண் மகராசி தந்தை கண்முன்னே பலியான உருக்கமான தகவல் வெளியானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயபாலும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

வாகனங்கள் சேதம்

மேலும் பஸ் மோதிய விபத்தில் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டர், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் சேதமடைந்தன.

முன்னதாக விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் அங்கு கூடி அரசு பஸ் டிரைவரை தாக்க முற்பட்டனர். உடனே அவர் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பிஓடி ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அங்கு பதற்றத்துடன் இருந்த டிரைவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து ஆரல்வாய்ெமாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story