மனைவி போன் எடுக்காததால் வீட்டின் உள்ளே செல்ல பைப் மீது ஏறி சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே, காலிங் பெல் வேலை செய்யாததால், வீட்டின் உள்ளே செல்ல பைப் மீது ஏறி சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியில் வசிப்பவர் தென்னரசு (வயது 30). இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாத நிலையில் மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். போன் எடுக்காத நிலையில் மூன்றாவது மாடிக்கு பைப்லைன் வழியாக பின்புறமாக ஏறி மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். வெகுநேரமாகியும் கணவன் வரவில்லை என்று புனிதா அண்ணனுக்கு போன் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த புனிதாவின் அண்ணன், தென்னரசுவின் செல்போனை தொடர்பு கொண்டார். பின்புறத்தில் இருந்து செல்போன் சத்தம் வந்ததால் அங்கு சென்று பார்த்த போது தென்னரசு ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, பின்னர் அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார்.
மனைவி போன் எடுக்காததால் பைப் மீது ஏறி சென்ற போது கணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.