வடமதுரை அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி
வடமதுரை அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டி நிலப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). இவர், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரது பால் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் தினேஷ், கடையின் எலக்ட்ரிக் ஆட்டோவில் சிவக்குமாரின் மகள் காருண்யா (11), மகன் தீனந்த் (9) ஆகியோரை ஏற்றிக்கொண்டு அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றார். நிலப்பட்டியில், திருமலைக்கேணி சாலையில் வந்தபோது, திடீரென்று தினேசின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தினேஷ் படுகாயமடைந்தார். மற்ற 2 பேரும் காயமின்றி உயிர்தப்பினர். இதையடுத்து தினேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.