ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.
அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் சின்னாளப்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராமேஸ்வர் (வயது 30) என்பது தெரியவந்தது. ராமேஸ்வருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.
அவர், வாடிப்பட்டி அருகே உள்ள டிராக்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு ராமேஸ்வர் சென்றார். அப்போது ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.