சின்னமனூரில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை; 2 பேர் கைது
சின்னமனூரில், வடமாநில வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூரில், வடமாநில வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநில வாலிபர்
பீகார் மாநிலம் நாலந்தா பகுதியை சேர்ந்தவர் ராம்கிஷன் மான்சி. அவருடைய மகன் பிரதீப் மான்சி (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நித்தீஷ்குமார் (30), பாபுசிங் (40). இவர்கள் 3 பேரும், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பழைய இரும்பு கடையில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வருகின்றனர்.
அந்த கடையில் இவர்கள் 3 பேர் தவிர, மேலும் 2 வடமாநில தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். இரும்பு கடையை ஒட்டியுள்ள அறைகளில் இவர்கள் தங்கியுள்ளனர். வேலை முடிந்தவுடன் தங்களது அறைகளில், இரவு நேரங்களில் அவ்வப்போது மது அருந்துவதை பழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இந்தநிலையில் நேற்று இரவு பிரதீப் மான்சி, நித்தீஷ்குமார், பாபுசிங் ஆகிய 3 பேரும் தங்களது அறையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது பிரதீப் மான்சி, மற்ற 2 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நித்தீஷ்குமாரும், பாபுசிங்கும் சேர்ந்து பிரதீப் மான்சியை தாக்கினர். மேலும் அறையில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிரதீப் மான்சி பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இதனை பார்த்த சக தொழிலாளர்கள் 2 பேரும், கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு இறந்து கிடந்த பிரதீப் மான்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நித்தீஷ்குமார், பாபுசிங் ஆகியோரை கைது செய்தனர்.