சவக்குழியில் மனைவி உடல் மீது அமர்ந்து பூஜை நடத்திய வாலிபர்


சவக்குழியில் மனைவி உடல் மீது அமர்ந்து பூஜை நடத்திய வாலிபர்
x
தினத்தந்தி 25 Nov 2022 11:08 PM IST (Updated: 26 Nov 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த மனைவியை புதைக்க தோண்டிய குழியில் மனைவியின் உடல் மீது அமர்ந்து பூஜை நடத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த மனைவியை புதைக்க தோண்டிய குழியில் மனைவியின் உடல் மீது அமர்ந்து பூஜை நடத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பிணி சாவு

திருப்பத்தூரை அடுத்த சின்ன பசலிகுட்டையை சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவரது மனைவி பூர்ணிமா (வயது 24). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பூர்ணிமா, கடந்த 22-ந் தேதி வீட்டின் அருகே மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது உடலை திருப்பத்தூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் பூர்ணிமாவின் உடலை ஒப்படைத்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில் கணவர் ராஜாதேசிங்கு உப்பு கொட்டினார்.

உடல் மீது அமர்ந்து பூஜை

பின்னர் குழியில் பூர்ணிமாவின் உடலை வைத்து, அதன்மீது அமர்ந்து பூர்ணிமாவின் உடல் மீதும், தன் மீதும் உப்பை கொட்டிக் கொண்டு அகோரி போல பூஜை செய்தார். இறுதி சடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள் யாரையும் இறுதிசடங்கு செய்ய கூட அனுமதிக்காமல் பிணத்தின் மீது படுத்துக் கொண்டு தியானம் நடத்தியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து 3 மணி நேரம் பிணத்தின் மீது தியானம் மேற்கொண்டார். பின்னர் தனது மனைவி முகத்தை முகத்தை யாரும் பார்க்கக்கூடாது எனக்கூறி அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினார். அதன்பின்னர் அவரே மண் வெட்டியால் மனைவி உடல் மீது மண் போட்டு மூடிவிட்டு வீடு திரும்பினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமியார் போன்று

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாதேசிங்கு சாமியார் போல் மாறினார். அவர் சிவபக்தர் போல் நடந்து கொண்டார். ஆனால் மனைவியின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல பூஜை செய்ததால் நாங்கள் பயந்து விட்டோம். அவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்றுதெரிய வில்லை என்றனர்.


Next Story