பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை


பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
x

மணப்பாறையில், பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

மாணவிக்கு கத்திக்குத்து

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலை கூறவே அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து உள்ளிட்ட 10 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

தீவிர சிகிச்சை

இதில், படுகாயம் அடைந்த மாணவியை அப்பகுதி மக்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மாணவியை கத்தியால் குத்தியது மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கேசவன் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே அந்த மாணவியை கடத்தி சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

இந்தநிலையில் கீழ பூசாரிப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதன்பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தவர் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய கேசவன் என்பதும், இவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story