ஏற்காட்டில் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடிபோதையில் வாலிபர் பலி
ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்காடு:
புத்தாண்டு கொண்டாட்டம்
சேலம் மாவட்டம், மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). இவர் நேற்று மாலையில் புத்தாண்டை கொண்டாட நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு வந்தார்.
அங்கு அவர், நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி புத்தாண்டை கொண்டாடும் வகையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நள்ளிரவில் அவர்கள் அனைவரும் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட தொடங்கினர். அப்போது சந்தோஷூக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
பலி
உடனே அவரை நண்பர்கள் ஏற்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விசாரணையில், சந்தோஷ் நேற்று முதல் முறையாக மது அருந்திய போது, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் இறந்தது தெரியவந்தது. இறந்த சந்தோஷூக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.