சிவலிங்கத்துடன் சுற்றித்திரிந்த வாலிபர்
சிவலிங்கத்துடன் சுற்றித்திரிந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரை அடுத்த இருணாப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வாலிபர் ஒருவர் சந்தே கப்படும் வகையில், சுற்றி திரிந்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் போதையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் திருடன் என சந்தேகம் அடைந்த அவரை சோதனை செய்து பார்த்த போது பாக்கெட்டில் சுமார் 650 கிராம் எடை கொண்ட சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது.
வெள்ளியில் செய்யப்பட்டதை போன்று இருந்த லிங்கத்தின் மீது 5 தலை நாகம் இருந்தது. மேலும் மஞ்சள், குங்குமம் வைக் கப்பட்டிருந்தது. இதனால் லிங்கத்தை எங்கிருந்து கொண்டு வந்தாய் என்று மக்கள் கேட்டதற்கு, அந்த வாலிபர் மவுனமாகவே இருந்தார். உடனடியாக குரிசிலாபட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
இதில் அவர் திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த பிரதாப் (28) என்பது தெரியவந்தது. அவர் போதையில் இருந்ததால், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் அனுப்பி வைக் கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.