புகார் மனுக்களை மாலையாக அணிந்து வந்த வாலிபர்
மயிலாடுதுறையில் புகார் மனுக்களை மாலையாக அணிந்து வந்த வாலிபர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்மோகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் முறையாக தவணை செலுத்த முடியாத நிலையில் 2021-ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்ததோடு அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த 2021 -ம் ஆண்டு மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக முன்பு மதன்மோகன் அவரது தாய் உமாமகேஸ்வரியுடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதன்பின்பும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2022-ம் ஆண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம்குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்துநிறுத்தினர். இந்நிலையில் மதன்மோகன் மயிலாடுதுறை கலெக்டரிடம் தொடர்ந்து மனுஅளித்துவந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளாக தான் அளித்த பல்வேறு மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு மதன்மோகன் நேற்று கலெக்டர் மகாபாரதியிடம் மீண்டும் மனுகொடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.