மாணவியை காதலிக்க வற்புறுத்தி கண்ணாடியில் கையை குத்திய வாலிபர்
மாணவியை காதலிக்க வற்புறுத்தி கண்ணாடியில் வாலிபர் கையால் குத்தினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவியை காதலிக்க வற்புறுத்தி கண்ணாடியில் வாலிபர் கையால் குத்தினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கல்லூரி மாணவி
காட்பாடி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இவரது வீட்டு மாடியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார். மாணவியின் அழகில் மயங்கிய வாலிபர் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.
மாணவியிடம் அடிக்கடி சென்று தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் மாணவி தான் வெளியூரில் இருந்து படிக்க வந்திருக்கிறேன். அது மட்டும் தான் எனது குறிக்கோள். காதலிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என கூறி இளைஞரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கண்ணாடியில் குத்தினார்
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அந்த வாலிபர் மாணவியின் அறைக்கு சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர் மாணவி அறையில் இருந்த கண்ணாடியை கையால் ஓங்கி குத்தினார். இதில் கண்ணாடி உடைந்து அவரது கையை கிழித்தது. அதை கண்டு மாணவி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
கையில் காயத்துடன் இருந்த வாலிபருக்கு உறவினர்கள் அறிவுரை கூறினர். பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவியை காதலிக்க வற்புறுத்தி தனது கையை வாலிபர் காயப்படுத்தி கொண்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.