நத்தத்தில் அரசு பஸ்சின் குறுக்கே படுத்து ரகளை செய்த வாலிபர்
நத்தத்தில் அரசு பஸ்சின் குறுக்கே படுத்து ரகளை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தத்தில் இருந்து இன்று மதியம் கருங்காலக்குடி கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நத்தம்-மூன்றுலாந்தர் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்தது. அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பஸ்சை மறித்தார். இதனையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பஸ்சின் அடிப்பகுதிக்கு சென்று டயருக்கு முன்னால் அவர் படுத்து ரகளை செய்தார். இதனால் டிரைவர், கண்டக்டர், பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். அவர்கள், எவ்வளவோ சொல்லியும் அந்த வாலிபர் எழுந்து வரவில்லை.
பின்னர் இதுகுறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அந்த வாலிபரிடம் பேசினர். இருப்பினும் அவர் வெளியே வர மறுத்து அடம் பிடித்தார். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர் வெளியே வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் நத்தம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. குடிபோதையில் அவர் பஸ்சின் அடிப்பகுதியில் படுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.