கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவிலில் கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவர் சாவு
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 37), தொழிலாளி. இவருக்கும் வடசேரி சி.பி.எச். ரோட்டை சேர்ந்த மணிகண்டன் மகள் ஸ்ரீசக்திக்கும் (36) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஸ்ரீசக்தி பறக்கையில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
புதுமண தம்பதியின் திருமண வாழ்க்கை இனிமையாக சென்ற நேரத்தில் திடீரென பேரிடி விழுந்தது. அதாவது சம்பவத்தன்று முருகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுப்பெண் தற்கொலை
கணவன் இறந்ததால் ஸ்ரீசக்தி மனமுடைந்து போனார். அந்த துக்கத்தில் இருந்து அவரால் மீண்டுவர முடியவில்லை. தொடர்ந்து அவர் கவலையுடனேயே இருந்தார். இந்தநிலையில் ஸ்ரீசக்தி கடந்த 3-ந் தேதி அன்று வேலை பார்த்த பேன்சி கடையில் விஷம் குடித்தார்.
உடனே அவரை அங்குள்ளவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீசக்தி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.