ஆன்லைன் மோசடி வலையில் சிக்கி ரூ.5¾ லட்சம் இழந்த இளம்பெண்
பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் என்ற பெயரில் நடந்த ஆன்லைன் நூதன மோசடியில் ரூ.5¾ லட்சத்தை இளம்பெண் இழந்தார். அதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இளம்பெண்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் 31-ந்தேதி அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வீட்டில் இருந்தே பகுதிநேர வேலை பார்த்து சம்பாதிக்க வேலைவாய்ப்பு இருப்பதாக கூறினார்.
அந்த பெண் வேலை குறித்து விசாரித்தார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள கணக்குகளை பின்தொடர்ந்து, அதனை 'ஸ்கிரீன்ஷாட்' புகைப்படமாக எடுத்து அனுப்பினால் ஒவ்வொரு கணக்குக்கும் ரூ.50 வீதம் சம்பாதிக்கலாம் என்று கூறினார். மேலும் இதுகுறித்த விவரங்களை 'டெலிகிராம்' செயலி மூலம் தெரிவிப்பதாக கூறினார்.
அதன்பேரில் அவருடைய செல்போனுக்கு ஒரு 'டெலிகிராம்' கணக்கின் இணைப்பு வந்தது. அதை திறந்தவுடன் அவருக்கு போனஸ் தொகை என்று ரூ.150 கிடைத்தது.
ரூ.5¾ லட்சம்
பின்னர், 'டெலிகிராம்' மூலம் தொடர்பு கொண்ட நபர், இந்த வேலையில் 2 வகையில் சம்பாதிக்கலாம் என்றார். முதலாவதாக தாங்கள் கூறும் இணையதளத்தில் பயனர் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணம் செலுத்தி, இன்ஸ்ட்டாகிராம் கணக்குகளை பின்தொடர்ந்து ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தை அனுப்பினால் ரூ.50 வீதமும், பயனர் கணக்கு தொடங்காமல் அனுப்பினால் ரூ.25 வீதமும் கிடைக்கும் என்றார். மேலும் இணையதளத்தில் செலுத்தும் பணத்துக்கும் லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
அதை நம்பிய அந்த பெண் டெலிகிராம் மூலம் தெரிவித்த இணையதளத்தில் பயனர் கணக்கு தொடங்கினார். அதில் முதலீடு செய்து அதில் கொடுக்கப்பட்ட பிரபலங்களின் கணக்குகளை பின்தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பிக் கொண்டு இருந்தார். அந்த வகையில் அவர் பல தவணைகளில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 180 செலுத்தினார். ஆனால், அந்த பணத்தையோ, வருமானத்தையோ பெற முடியவில்லை. ஏற்கனவே செலுத்திய பணம் அவருடைய கணக்கில் லாபத்துடன் இருப்பதாகவும், அதை திரும்பப் பெற வேண்டும் என்றால் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் மர்ம நபர்கள் கூறினர்.
வழக்குப்பதிவு
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மர்ம நபர்கள் பணம் பறிக்க பயன்படுத்திய சமூக வலைத்தள கணக்குகள், வங்கிக் கணக்கு, இணையவழி பணப்பரிமாற்ற கணக்குகளின் விவரங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.