பாலத்தில் இருந்து குதிக்கப்போவதாக மிரட்டிய இளம்பெண்ணால் பரபரப்பு


பாலத்தில் இருந்து குதிக்கப்போவதாக மிரட்டிய இளம்பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே பாலத்தில் இருந்து குதிக்கப்போவதாக மிரட்டிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

குலசேகரம்-தக்கலை சாலையில் உள்ள வலியாற்றுமுகம் பாலத்தில் நேற்று காலை 10 மணி அளவில் ஆபத்தான முறையில் இளம்ெபண் ஒருவர் அமர்ந்து கொண்டு, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.

இதனால் அந்த வழியாகச் சென்றவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த இளம்பெண்ணை சிலர் பிடிக்க முயன்ற போது, அருகில் வராதீர்கள். வந்தால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். மேலும் அவர் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து கீழே 30 அடி பள்ளம் இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் மீட்டார்

உடனே இதுபற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அப்பகுதி வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக பாய்ந்து சென்று அந்த இளம் பெண்ணை பிடித்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் இளம்பெண்ணை சாலைக்கு கொண்டு வந்தனர். அதே சமயம் குலசேகரம் போலீஸ் நிலைய பெண் போலீசார் இருவர் அங்கு வந்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் அவர் குலசேகரம் அருகே திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியை சேர்ந்த ரெஞ்சினி (வயது 20) என்பதும், அவருடைய தந்தை லாசர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்பதும், தாயார் சரஸ்வதி பராமரிப்பில் ரெஞ்சினி இருந்து வந்ததும் தெரிய வந்தது. ரெஞ்சினி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பல முறை குளம், கால்வாய் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டுக் கொண்டு குதிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்களால் மீட்கப்பட்டு வீட்டுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம் என்றும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் தாயை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.


Next Story