முதியவரை உறவினர் என கூறி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்


முதியவரை உறவினர் என கூறி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்
x

நாகர்கோவிலில் காப்பகத்தில் உள்ள முதியவரை உறவினர் என கூறி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட காப்பகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் காப்பகத்தில் உள்ள முதியவரை உறவினர் என கூறி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட காப்பகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.

சீல் வைக்கப்பட்ட காப்பகம்

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் அரசு அனுமதி இன்றி முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருவதாக குமரி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அதிகாரியால் சோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பு அந்த காப்பகத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்ட காப்பகத்தில் இருந்த முதியோர்கள் மற்றொரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் நெல்லையை சேர்ந்த 62 வயது முதியவரும் ஒருவர்.

இந்த நிலையில் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அறியாத முதியவரின் உறவினர், முதியவரின் பராமரிப்புக்காக சீல் வைக்கப்பட்ட காப்பகத்திற்கு பணம் அனுப்பினார். இந்த பணத்தை சீல் வைக்கப்பட்ட காப்பகமும் பெற்றது. பின்னர் முதியவரிடம் பேச வேண்டும் என உறவினர் காப்பக நிர்வாகத்திடம் கேட்டு கொண்டார். ஆனால் அதற்கு காப்பக நிர்வாகம் தரப்பில் சாியான பதில் அளிக்கவில்லை. இதனால் முதியவரின் உறவினரை ஏமாற்றி தொடர்ந்து பணம் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என சீல் வைக்கப்பட்ட காப்பகத்தினர் நினைத்தார்கள். இதற்காக ஒரு இளம்பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பி முதியவரை அங்கிருந்து கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

முன்னுக்குப் பின் முரணாக...

அதன்படி திக்கணங்கோடு பகுதிைய சோ்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர், முதியவர் இருக்கும் காப்பகத்திற்கு சென்று அந்த முதியவர் எனது தாத்தா எனவும், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் கூறினார். மேலும் இளம்பெண், காப்பக நிர்வாகத்திடம் சில ஆவணங்களை காட்டியுள்ளார். ஆனாலும் சமூக நலத்துறையிடம் அனுமதி பெற்று முதியவரை அழைத்து செல்லலாம் என காப்பகத்தின் நிர்வாகிகள் இளம்பெண்ணிடம் கூறினர்.

இதனை தொடா்ந்து இளம்பெண் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் விவரங்களை தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மனுவும் அளித்தார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி இளம்பெண்ணிடம் துருவி, துருவி சில கேள்விகளை கேட்டார். ஆனால் இளம்பெண்ணின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

இளம்பெண்ணிடம் விசாரணை

பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையில், சீல் வைக்கப்பட்ட தனியார் முதியோர் காப்பகத்தினர் பணத்திற்கு ஆசைப்பட்டு முதியவரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்ததும், அதற்காக அந்த இளம் பெண்ணை பயன்படுத்தி நாடகமாடியதும் அம்பலமானது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story