ஆட்டோவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை


தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே ஆட்ேடாவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற டிரைவரையும் தாக்கிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளம்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளம் மேலதெருவைச் ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கொத்தனார். இவருடைய மனைவி வெள்ளத்துரைச்சி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வெள்ளப்பனேரி கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு வெள்ளத்துரைச்சி சென்றார். பின்னர் அங்கு இருந்து மீண்டும் ஊருக்கு இரவில் பஸ்சில் புறப்பட்டார். ஆனால், அந்த பஸ் கட்டாரங்குளத்திற்கு செல்லவில்லை. அதாவது, 3 கிலோ மீட்டர் முன்னதாக உள்ள குமரெட்டியாபுரம் வரை மட்டுமே சென்றது. இரவு 10 மணி ஆகிவிட்டதால் அங்கிருந்து தனது ஊருக்கு செல்ல பஸ் இல்லாமல் வெள்ளத்துரைச்சி தவித்தார். இதையடுத்து அவர் தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரான வானரமுட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் (35) என்பவரை தொடர்பு கொண்டு குமரெட்டியாபுரம் பஸ் நிறுத்தத்தில் நிற்பதாகவும், தன்னை வீட்டிற்கு கொண்டு விடும்படியும் கூறினார்.

ஆட்டோவில் பயணம்

இதையடுத்து சண்முகராஜ் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். பின்னர் வெள்ளத்துரைச்சியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு புறப்பட்டார்.

நள்ளிரவில் நாச்சியார்பட்டி-காளாம்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. அப்போது, மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்தார். அவர் ஆட்டோவை வழிமறித்து மேய்ச்சலுக்கு விட்ட எனது ஆடுகளை காணவில்லை. அதை பார்த்தீர்களா? என்று கேட்டார். ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினார். இதையடுத்து ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது.

வெட்டிக் கொலை

சிறிது தொலைவில் சென்றபோது மீண்டும் அந்த நபர், ஆட்டோவை வழிமறித்தார். பின்னர் சண்முகராஜ் கீழே இறங்கினார். அவரிடம் மீண்டும் ஆடுகள் குறித்து மர்ம நபர் கேட்டார்.

அப்போது, திடீரென்று மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கம்பால் சண்முகராஜை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் ஆட்டோவில் இருந்த வெள்ளத்துரைச்சி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். ஆனால், அதற்குள் அந்த மர்மநபர் அரிவாளால் ஆட்டோவில் அமர்ந்திருந்த வெள்ளத்துரைச்சியின் தலையில் பலமாக ெவட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

போலீசார் விரைந்தனர்

பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த சண்முகராஜ் ஆட்ேடாவில் வெள்ளத்துரைச்சி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அவர் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சண்முகராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட வெள்ளத்துரைச்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

காரணம் என்ன?

நேற்று காலையில் சம்பவ இடத்தை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விேராதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மர்ம நபரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்ட பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கோவில்பட்டி அருகே ஆட்ேடாவை வழிமறித்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story