தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண்


தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண்
x

தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீடு செய்வதாக கூறி ரூ.44 லட்சம் மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க நகர்,

சென்னை பெரவள்ளூர், எஸ்.ஆர்.பி. காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக் (வயது 41). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது சேமிப்புக்காக பிரபல தனியார் நிறுவனத்தில் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தார்.

அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் முதலீடு சம்பந்தமாக ஜெரி மெசாக்க்கு உதவி செய்து வந்ததாக தெரிகிறது.

கொரோனா காலத்தில் வேலையை விட்ட இந்துமதி, வீட்டில் இருந்தபடி பண முதலீடு சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கி வருவதாக கூறி ஜெர்ரி மெசாக்கிடம் சிறுக சிறுக முதலீடு செய்ய பணத்தை வாங்கினார். ஜெரி மெசாக் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் கடந்த ஒரு ஆண்டில் செலுத்தினார். இந்துமதியும் அதற்கான ரசீது மற்றும் மெயில் சம்பந்தமான பதிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து அனுப்புவதாக அனுப்பி வைத்து வந்தார்.

ரூ.44 லட்சம் மோசடி

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு சென்ற ஜெரி மெசாக் தனது முதலீடு பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே இருந்தது. மீதி ரூ.44 லட்சம் தனது கணக்கில் இல்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இந்துமதியிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்காததால் இது குறித்து பெரவள்ளுர் போலீசில் ஜெரி மெசாக் புகார் கொடுத்தார்.

போலீசார் இதுகுறித்து விசாரணை செய்ததில் இந்துமதி திட்டமிட்டு பணத்தை மோசடி செய்ததும், போலியான மெயில் மற்றும் வங்கிக்கணக்கை வைத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் இந்துமதி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story