காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
பெண்ணாடம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணாடம்,
காதல் திருமணம்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் மகன் விஜய் (வயது 25). இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள எடக்குடியை சேர்ந்த மூக்கையன் மகள் விஜயலட்சுமி (22) என்பவரும் காதலித்து கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு 1½ வயதில் விஸ்வா என்ற ஆண் குழந்தை உள்ளது.
விஜய் தனது மனைவி, குழந்தையுடன் ஈரோட்டில் தங்கி, அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
தீக்குளித்து தற்கொலை
இந்தநிலையில் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான நத்திமங்கலத்துக்கு வந்திருந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி வீட்டின் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தன் உடல் மீது மண்எண்ணெயை் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.