காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு


காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலனால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர்,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் காசிநாத். இவருடைய மனைவி லீலா. இந்த தம்பதியின் மகள் பூஜா (வயது 19). காசிநாத்-லீலா தம்பதி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் அனாதையாக தவித்த பூஜாவை பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் வசித்துவரும் அவருடைய தாய்மாமா இப்ராகிம் வளர்த்து வந்தார்.

பூஜா ராயர்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலைக்குச்சென்ற இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் லோகேஷ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது.

தீ வைப்பு

இந்தநிலையில், பூஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகேசை வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலர்கள் இருவரும் பல்லடம் பனப்பாளையம்-பெத்தாம்பாளையம் சாலையில் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் பூஜா வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ், பூஜாவிடம் நைசாக பேசி சற்று தொலைவில் இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து அதை பூஜா மீது ஊற்றி திடீரென்று தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி பூஜா படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றபோது லோகேசும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் பூஜா அனுமதிக்கப்பட்டார்.

லோகேஷ் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்தநிலையில், பூஜா போலீசாரிடம் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தனது காதலன் லோகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story