கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்
ஊராட்சி செயலாளர் பதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
வந்தவாசி அருகே சென்னாவரம் ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்துக்கு பிருதூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி (வயது23) என்ற இளம்பெண் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் வேறு ஒரு பெண்ணுக்கு அந்த பணி வழங்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அதை கண்டித்து அந்த பெண் ஊராட்சி மன்றம் அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.
அதைத்தொடர்ந்து வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் தனது குடும்பத்திடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நந்தினி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குடும்பத்துடன் போர்டிகோ கீழ் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தனக்கு ஊராட்சி செயலாளர் பணி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தினார்.
பின்னர் தாசில்தார் சுரேஷ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.