வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
அய்யலூர், பழனியில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
அய்யலூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (வயது 20). இவர் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சவுந்தர்யா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று மாலை கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையே அவரது குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, சவுந்தர்யா தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவுந்தர்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பழனி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பழனியை அடுத்த பாலசமுத்திரம் மருதகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று தனது வீட்டில் காளிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.