விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது
குளச்சல் அருகே விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விஷ்ணு கோவிலில் கொள்ளை
குளச்சல் அருகே உள்ள களிமாரில் விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜைகளை முடித்து நிர்வாகிகள் பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர் நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. அந்த உண்டியலில் ரூ.6 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் பிரபாகரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் நேற்று குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார்.
உடனே, போலீசார் அவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குளச்சல் லியோன்நகரை சேர்ந்த வினித் (வயது28) என்பதும், களிமார் விஷ்ணு கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேலும், கருங்கல், நித்திரவிளை போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பங்களில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. அதைதொடர்ந்து போலீசார் வினித்தை கைது செய்தனர்.