வேளச்சேரியில் டீக்கடையில் கள்ளநோட்டு மாற்றிய வாலிபர் கைது
சென்னை வேளச்சேரி விஜயநகரில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.100 கள்ளநோட்டை வாலிபர் ஒருவர் தந்து விட்டு சென்றதாக போலீசாருக்கு டீக்கடைக்காரர் புகார் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி விஜயநகரில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.100 கள்ளநோட்டை வாலிபர் ஒருவர் தந்து விட்டு சென்றதாக போலீசாருக்கு டீக்கடைக்காரர் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் கூரியர் தபால் மூலம் கள்ளநோட்டுகள் அனுப்பப்படுதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்ட தனிப்படையினர் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்துக்கு கண்காணித்தபோது, கள்ளநோட்டு பார்சலை பெற வந்த வேளச்சேரி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (வயது30) என்பவரை மடக்கி பிடித்தனர்.
அப்போது டீக்கடையில் கள்ளநோட்டை மாற்றியதும் சதீஷ் தான் என தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த சுஜீத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன் முலம் ரூ.4 ஆயிரம் அனுப்பினால் ரூ.8 ஆயிரம் அனுப்பியதாகவும் கூறினார். இதையடுத்து சதீஷிடமிருந்து ரூ.100க்கான 69 தாள்களும் ரூ.200-க்கான 8 தாள்களும் ரூ.500-க்கான 26 தாள்களும் என ரூ.21,500 கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதீஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.