மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபருக்கு தர்மஅடி


மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 8 Jan 2023 2:00 AM IST (Updated: 8 Jan 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 80). நேற்று இவர், சமத்துவபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு பழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தனியாக தனது வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து, போர்வையால் முக்காடு போட்டு முகத்தை மறைத்தப்படி வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர், வெள்ளையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். மேலும் தான் வைத்திருந்த போர்வையை, வெள்ளையம்மாள் மீது போர்த்தி விட்டு கண்இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார்.

போர்வை போர்த்தப்பட்டதால் திக்கு, முக்காடிய வெள்ளையம்மாள் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில், நகை பறித்த வாலிபரை கிராம மக்கள் தேடினர். அப்போது ஒரு தோட்டத்துக்குள் அந்த வாலிபர் பதுங்கி இருந்தார். கிராம மக்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர், சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சமத்துவபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (32) என்றும், அவர் வெள்ளையம்மாளிடம் தங்க சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.


Next Story