கோவில் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டி அருகே நாகம்மாள் கோவில் உள்ளது. நேற்று பட்டபகலில் கோவிலுக்கு 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். இதனை அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் பூசாரி சின்னத்துரைக்கு அவர் தகவல் கொடுத்தார். உடனே பூசாரியும், அப்பகுதி மக்களும் கோவிலுக்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த மர்ம நபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மற்றொருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், பிடிபட்ட நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பள்ளப்பட்டியை சேர்ந்த சந்திரன் மகன் விஜய் (வயது 27) என்றும், தப்பியோடியவர் மணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மணியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.