பறவைகள் பூங்காவாக மாறும் உயிரியல் பூங்கா


பறவைகள் பூங்காவாக மாறும் உயிரியல் பூங்கா
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இங்குள்ள விலங்குகளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை, ஏப்.13-

கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இங்குள்ள விலங்குகளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரியல் பூங்கா

கோவை மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு தலமாக வ.உ.சி. உயிரியல் பூங்கா விளங்கி வந்தது. இந்த நிலையில் உயிரியல் பூங்கா செயல்பட போதிய இடவசதி இல்லை என்று கூறி, மத்திய அரசு இதற்கான அனுமதியை ரத்து செய்துவிட்டது. இதையடுத்து கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

ஆனாலும் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உயிரியல் பூங்காவை, பறவைகள் பூங்காவாக மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உயிரியல் பூங்காவின் இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

அனுமதி ரத்து

கோவையில் 1965-ம் ஆண்டு வ.உ.சி. உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருந்தன. அதன் பின்னர் போதிய இடவசதி இல்லாததால் அவை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாததால் கடந்த ஆண்டு உயிரியல் பூங்காவுக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டது. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்லும் நிலை உள்ளது.

பறவைகள் பூங்காவாக மாற்றம்

இந்த நிலையில் உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி தனியார் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற திட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் பூங்காவில் உள்ள புள்ளிமான, கடமான், குரங்கு, பாம்புகள், முதலை, மயில், மரநாய், கிளி, நீர்வாழ் பறவைகள் பெலிக்கன் உள்பட 100- க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் அனைத்தும் வண்டலூர் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து பறவைகள் பூங்காவிற்கு சிறிய வகை வெளிநாட்டு பறவைகளை இங்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள கூண்டுகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு, பறவைகள் பூங்காவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story