வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இ-சான்று பெற வேண்டும்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இ-சான்று பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை 100 சதவீதம் சரியானதாக ஆக்கவும், போலியான விவரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இப்பணிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் ஆயிரம் நபர்களுக்கு ஆன்-லைனில் இணைய தளம் வாயிலாக இ-சான்று வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளம் மூலம் வாக்காளர் அட்டையுடன்் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ- மாணவிகள் இ-சான்று பெற ஊக்குவிக்க கல்லூரி முதல்வர்கள் முன் வர வேண்டும். அதேபோல் வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து இ-சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.