தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க 1611 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. தூத்துக்குடியில் நடைபெற்ற முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1.8.2022 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் 14 லட்சத்து 63 ஆயிரத்து 890 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று முன்தினம் வரை சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் தங்களது ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர். இது 31 சதவீதமாகும்.

சிறப்பு முகாம்

இந்த நிலையில் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,611 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த முகாம்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பித்தனர்.

இந்த விபவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக உரிய செயலி மூலம் உடனுக்குடன் பதிவேற்றம் செய்தனர்.

ஆணையாளர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விவரமாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story