7 லட்சம் மின்இணைப்புடன் ஆதார் எண்கள் இணைப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இதுவரை 7 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வகையில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி உத்தரவின்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து நகர்ப்புற கோட்டத்தில் பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 465 மின் இணைப்புகள் உள்ளன. இதில் இதுவரை சுமார் 7 லட்சத்து 5 ஆயிரத்து 142 மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இது 60.89 சதவீதம் ஆகும். இந்த தகவலை நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தெரிவித்து உள்ளார்.