மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இருக்கன்குடி,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறும், அர்ச்சுனா நதியும் சந்திக்கக்கூடிய இடத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.
இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ெகாடியேற்றம் நடந்தது.
நேற்று ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மன் வீதி உலா
திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கி்றன.
முக்கிய நிகழ்ச்சியாக ஆடி கடைசி வெள்ளியான வருகிற 11-ந் தேதி மதியம் 2 மணிக்குமேல் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரையில் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.