புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா
கடலூர் மஞ்சக்குப்பம் புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள்நகரில் அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், நவாக்ஷரி ஹோமம் நடந்தது. அதையடுத்து பாலவிநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணி அளவில் புத்துமாரியம்மனுக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டது. மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை முடிந்து, சாகை வார்த்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து மாலை 3 மணிக்கு செடல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும், பம்பை கலைக்குழுவின் சார்பில் சிறப்பு வர்ணித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு பிறகு திருவிளக்கு பூஜை நடக்கிறது.