பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கடலூர்
பாடலீஸ்வரர் கோவில்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து கடந்த 13-ந் தேதி கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டதும், சாமி வீதிஉலா நடைபெற்றது.
ஆடிப்பூர விழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா நேற்று பெரியநாயகி அம்மன் சன்னதியில் நடைபெற்றது. இதையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேக பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு வளையலணி விழா நடந்தது. தொடர்ந்து மாங்கல்ய பொருட்களான மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை அம்மனுக்கு பக்தர்கள் வழங்கினர். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜை செய்யப்பட்ட மாங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
2 லட்சம் வளையல்கள்
இதேபோன்று, பண்ருட்டி லட்சுமிபதி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் எழுந்தருளி இருக்கும் கருவறை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் நகர சபை தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வளையல்கள், மஞ்சள் குங்குமம் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள்.