வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனின் குரல் இனிமையானதா? சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்தது. இதனால் இந்த கோவிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதற்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. முன்னதாக அம்மன் எழுந்தருளி கொடிமரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள், தேவார பாடல்கள் பாடி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம் மற்றும் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.