திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரியாபட்டி,
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
திருச்சுழியில் பழமை வாய்ந்த திருமேனிநாதர், துணை மாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழாவானது 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் சுவாமி கிளி, குதிரை, சேஷம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
தபசு காட்சி
வருகிற 30-ந் தேதி காலையில் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், 31-ந் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு கேடய நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து ஆகஸ்டு 1-ந் தேதி காலையில் ஆற்றங்கரையில் தீர்த்த நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருமேனிநாதர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு அன்று இரவு திருச்சுழி குண்டாற்றில் எழுந்தருளி துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதன் பின்னர் சுவாமி மற்றும் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். அத்துடன் விழா நிறைவடைகிறது.