பிரதமரின் ஊக்கத்தொகை பெறவிவசாயிகளுக்கு ஆதார் எண் பதிவு அவசியம்கலெக்டர் உமா தகவல்
பிரதமரின் ஊக்கத்தொகை பெற விவசாயிகளுக்கு ஆதார் எண் பதிவு அவசியம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 4,831 விவசாயிகள் இ-கே.ஒய்.சி. சரிபார்ப்பு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இவ்விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி இ-கே.ஒய்.சி. சரிபார்ப்பு பணியை விரைந்து முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 4,744 விவசாயிகள் தனது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு இத் திட்டத்தின் 14-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது.
ஆதார் இணைப்பு அவசியம்
எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 14-வது தவணை தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்திடவும், இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கிடவும் வேண்டும்.
மேலும் அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கணக்கு தொடங்கம்பொழுது 48 மணி நேரத்திற்குள் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் எண்ணை இதுவரை இணைக்காத விவசாயிகள் அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.