விவசாயிகளிடம் தடையில்லா சான்று கேட்பதை கைவிட வேண்டும்
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் தடையில்லா சான்று கேட்பதை கைவிட வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் தடையில்லா சான்று கேட்பதை கைவிட வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புங்கம்பட்டு நாடு ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. எங்கள் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை இல்லை. கீழே இருந்து மருத்துவர்கள் மேலே வர சரியான சாலை வசதி இல்லாததால் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறோம். இதனால் எங்கள் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
கைவிட வேண்டும்
கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தடையில்லா சான்று கேட்கின்றனர். இந்த சான்றிதழ் வாங்க ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுபோகிறது. இதைதடுக்க அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
வனவிலங்குகளில் இருந்து பயிர் வகைகளை பாதுகாக்க மாவட்டத்தில் 'வன விலங்குகள் சரணாலயம்' அமைக்க வேண்டும். காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த வனப்பகுதி எல்லையில் 10 அடிக்கு பள்ளம் வெட்டி அங்கு காட்டுபன்றிகளை அடைக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. நெல் பயிர் நடுவதற்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கும்.
ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியில் ரெயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பேசியதாவது:-
நடவடிக்கை
மாவட்டத்தில் 4 இடங்களில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, தேவைப்படும் இடங்களில் விரைவில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர் கடன் கேட்கும் விவசாயிகளிடம் தடையில்லா சான்று கேட்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பிரச்சினை தொடர்வதால் இது தொடர்பாக கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் இருப்பு வைத்துள்ள உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருப்பத்தூர் லட்சுமி, வாணியம்பாடி பிரேமலதா, தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.