குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்வு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்த்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
நிதி உதவி உயர்வு
விதவை, விவாகரத்து பெற்றவர் அல்லது குடும்பத்தால் கைவிடப்பட்டரின் குழந்தைகள், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் உறவினரின் பாதுகாப்பில் வளரும் குழந்தை, அச்சுறுத்தலுக்கு உள்ளான பெற்றோரின் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காணாமல் போன, வீட்டை விட்டு ஓடிப்போன குழந்தைகள்.
எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைபாடுள்ள குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோர சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பிரதமமந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்த்தப்பட்டு உள்ளது.
வருமானம் உச்ச வரம்பு
அதன்படி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட மிஷ்ஷன் வட்சாலயா வழிகாட்டி நெறிமுறைகளின்படி நிதி உதவி தொகையானது ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும், இதர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.96 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்தில் 6-வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகையும், 0424 2225010 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே மேற்கண்ட குழந்தைகள் எவரேனும் இருப்பின் நிதி ஆதரவு உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.