மூதாட்டியிடம் 4 பவுன் நகை அபேஸ்


மூதாட்டியிடம் 4 பவுன் நகை அபேஸ்
x

பெண்ணாடத்தில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மன்னார் நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மனைவி தவமணி (வயது 70). இவர் நேற்று மதியம் வடக்கு ரத வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் அங்கிருந்து நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் டிப்டாப் உடை அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் தவமணியை திடீரென வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள், தவமணியிடம், நாங்கள் போலீஸ்காரர்கள். இதே இடத்தில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) பெண் ஆசிரியை ஒருவரிடம் மர்ம நபர்கள் கம்மலை பறித்துச் சென்று விட்டனர். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நாங்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே மர்மநபர்களிடம் இருந்து உங்களது நகைகளை பாதுகாத்து கொள்ளும் வகையில், நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கழட்டி கையில் வைத்திருக்கும் பர்சில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

சிறிது தூரத்தில் இன்ஸ்பெக்டர் இருக்கிறார். எனவே நீங்கள் நகையை கழட்டி வைத்து கொண்டு செல்லாமல் போனால் அவர் உங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

உதவி செய்வது போல் நடித்து...

இதை உண்மை என நம்பிய தவமணி தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை கழட்டினார். அப்போது அந்த நகையை வாங்கிய மர்மநபர்கள், அதனை தவமணியின் பர்சில் வைத்து கொடுப்பது போல் நடித்து அபேஸ் செய்துவிட்டு தப்பிச்சென்றனர். சிறிது நேரம் கழித்து தவமணி தனது பர்சை பார்த்தபோது, அதில் நகை இல்லை.

அப்போது தான் தன்னிடம் மர்மநபர்கள் 2 பேர் போலீஸ் என கூறி உதவி செய்வது போல் நடித்து நகைக்கு பதில் சிறியகல்லை பர்சில் வைத்துவிட்டு நகையை அபேஸ் செய்து சென்றது அவருக்கு தெரிந்தது. இது குறித்து தவமணி பெண்ணாடம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

வலைவீச்சு

இதில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த 2 பேரின் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதில் ஒருவர் ஹெல்மெட்டும், மற்றொருவர் முககவசமும் அணிந்திருந்தார். அந்த காட்சிகளை பயன்படுத்தி மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story