ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில்...

திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் என பயணிகள் கூட்டம் பஸ்சில் அதிகமாக இருந்தது. இந்த பஸ்சில் நாகர்கோவில் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த முனியப்பன் மனைவி சொர்ணம் பாய் (வயது 51) என்பவரும் பயணம் செய்தார்.

அந்த பஸ் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் வந்த போது, சொர்ணம் பாய் தான் அணிந்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை என திடீரென கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் திடீரென பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் அந்த பெண் பஸ் முழுவதும் நகையை தேடி பார்த்தார். ஆனாலும் நகை கிடைக்கவில்லை.

பெண்ணிடம் நகை அபேஸ்

பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா பஸ் நிலையம் சென்றது. அதே சமயத்தில் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் இருந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். ஆனால் நகை யாரிடமும் இல்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி நகையை நைசாக அபேஸ் செய்து தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.

பின்னர் சம்பவ நடந்த இடம் நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் அளிக்கும்படி கோட்டார் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சொர்ணம்பாய் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகையை அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story