மயக்க பொடி தூவி முதியவரிடம் ரூ.14 ஆயிரம் அபேஸ்
நாகர்கோவிலில் மயக்க பொடி தூவி முதியவரிடம் ரூ.14 ஆயிரத்தை பறித்துச் சென்ற போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மயக்க பொடி தூவி முதியவரிடம் ரூ.14 ஆயிரத்தை பறித்துச் சென்ற போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தோஷம் கழிப்பதாக...
நாகர்கோவில் நேசமணி நகர் நெசவாளர் காலனி பகுதியில் நேற்றுமுன்தினம் காவி உடை அணிந்த ஒருவர் சுற்றி திரிந்தார். அந்த நபர் பார்க்க சாமியார் போல் இருந்தார்.
அங்குள்ள வீடுகளில் பிச்சையெடுத்த அவர் சில வீடுகளில் இருந்தவர்களிடம் உங்கள் வீடுகளில் தோஷம் இருக்கிறது என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்தநிலையில் 60 வயது முதியவர் ஒருவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
இதனை கவனித்த காவி உடை அணிந்த நபர் முதியவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்போது, உங்களது வீட்டில் தோஷம் உள்ளது. அந்த தோஷத்தை நீக்கி தருகிறேன் என தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி முதியவரும் வீட்டுக்குள் அனுமதித்தார். பின்னர் சில மந்திரங்களை சொல்வது போல பாவனை செய்த அவர் திடீரென முதியவர் மீது ஒரு பொடியை மீது தூவியுள்ளார். இதில் சற்று நேரத்தில் முதியவர் மயக்க நிலைக்கு சென்றார்.
பணம் அபேஸ்
உடனே வீட்டில் இருந்த ரூ.14 ஆயிரத்தை திருடி விட்டு அந்த நபர் தப்பி சென்றார். இதற்கிடையே மயக்கம் தெளிந்த முதியவர், பதற்றத்துடன் வீட்டில் இருந்த பணம் ஏதும் காணாமல் போய் உள்ளதா? என பார்த்துள்ளார். அப்போது தான் தோஷம் கழிப்பதாக கூறிய நபர் பணத்தை திருடி சென்றதும், அவர் போலி சாமியார் என்பதும் அவருக்கு தெரியவந்தது.
இதுபற்றி நேசமணி நகர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
உடனே போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அவற்றை ஆய்வு செய்தனர். அதில் ஒரு காவி உடை அணிந்த ஒருவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததும், அவரது உருவம் தெளிவாக பதிவாகி உள்ளதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.