ஆன்மிக சுற்றுலா தலமாக மாறும் அபிராமி அம்மன் கோவில்


ஆன்மிக சுற்றுலா தலமாக மாறும் அபிராமி அம்மன் கோவில்
x
தினத்தந்தி 2 Sept 2023 3:30 AM IST (Updated: 2 Sept 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மெயின்ரோடு பகுதியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திண்டுக்கல் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ஆனால் கோவிலின் மேற்கு பகுதியில் பெரிய கழிவுநீர் கால்வாய் செல்கிறது. மேலும் அந்த பகுதி, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. அதோடு கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதியில் உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் வருவதால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதற்கிடையே அபிராமி அம்மன் கோவிலை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி அபிராமி அம்மன் கோவிலை சுற்றிலும் மழைநீர் தேங்காதவாறு கால்வாய், பாலம் கட்டப்படுகிறது. அதேபோல் கோவிலின் கிழக்கு பகுதியில் இருக்கும் நடைபாதை கடைகள் கச்சேரி தெருவுக்கு மாற்றப்பட உள்ளது. மேலும் கோவிலின் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள சாலைகளுக்குள் வாகனங்கள் வராமல் தடுக்க, சாலைகளின் நுழைவு பகுதியில் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக கிரிவல பாதையில் சோலார் மின்விளக்குகள், குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.


Next Story